Monday, April 23, 2012

நீரும் தமிழரும் - 5

முந்தைய பதிவில் நீரை பொறுத்த வரை தனி மனித செயல்பாடுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றி பார்த்தோம்! இன்னும் ஏராளமான வழிமுறைகள் இருக்கலாம், அவையெல்லாம் Water Conservation Manuals ஏதேனும் இருந்தால் அதிலிருந்து கிடைக்ககூடும். கொஞ்சம் நீங்கள் ஆர்வத்துடன் முயன்றால் "கூகுளாண்டவர்" தேடித்தருவார் என்ற நம்பிக்கையில், இந்த பதிவில் சமூக/குழு வடிவில் செய்யவேண்டிய நீர் பாதுகாப்பு, நீராதார பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் அழிந்துபட்ட/ஆக்கிரமிக்கப்பட்ட நீராதாரங்களை மீட்டெடுப்பது தொடர்பானவை பற்றி அலசுவதாகத்தான் முன்னம் எண்ணியிருந்தேன்! ஆனால் சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு சட்ட முன் வடிவு இந்த பதிவை வேறு திசையில் திருப்பியிருக்கிறது! அது என்னவெனில் இந்திய அரசின், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் "DRAFT NATIONAL WATER POLICY (2012)" தான்.


அதிகமில்லை பதினேழு பக்கங்கள் தான்,ஆர்வமும் நேரமும் இருப்பவர்கள் மேலே தொடுப்பில்(LINK) உள்ள வரைவு சட்டத்தை முழுதும் படித்துப் பாருங்கள்.

இந்த சட்டவரைவை படிப்பது நேரவிரயம் என்று எண்ணுபவர்களுக்கு ஒன்று தான் சொல்ல முடியும், "மக்களாட்சி" என்பதில் மக்களின் பங்களிப்பு என்பது வாக்களிப்பதோடு முடிந்து விடுகிறது என்று என்னும் "மடையர்" தான் நீங்கள். இது மாதிரியான சட்ட வரைவுகள் மக்களின் கருத்துக்காக வெளியிடப்பட்டு, கருத்துகள் பெறப்பட்டு, பின்னரே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலமாக சட்டமாகும்

For those who advocate "Democracy" as the best form of Governance, Please understand it is not best until it is "Inclusive Democracy"

வாய்ப்பு கொடுக்கும் பொது வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, சட்டமான பிறகு சத்தமிட்டு பயனில்லை மக்களே!இந்த வரைவுக்கான காலவரையறை முடிந்து விட்டது! இருந்தாலும் படிப்பதில் தவறில்லை!

சரி வரைவு சட்டத்தின் உள்ளடக்கம் என்ன சொல்கிறது ! ஒரு கழுகுப்பார்வை பார்க்கலாமா?
  1. இந்த வரைவு சட்டம், நீரை இனியும் வெறும் வாழ்வாதரமாயும் / இயற்க்கை வளமாயும் பார்க்காமல் ஒரு பொருளாதார பார்வை பார்க்கிறது!
  2. மாறிவரும் காலச்சூழ்நிலை, பருவமழை மாற்றம், பெருகிவரும் சனத்தொகை, அருகிவரும் நன்னீர் ஆதாரம்! போன்றவை பற்றி கவலை தெரிவிக்கிறது.
  3. நீர் பங்கீட்டாளர்களின் பங்களிப்பு (பொருளாதார), காலச்சூழலுக்கு ஏற்ற விவசாய வழிமுறைகள் போன்றவற்றை முன்னிறுத்துகிறது
  4. நீரின் மேலாண்மையை ஊக்குவிக்கவும், சிக்கன நீர் பயன்பாட்டை உறுதிபடுத்தவும் நீருக்கு விலை வைக்கவும், அந்த விலை நீரின் மொத்த நிர்வாக செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுகளை ஈடுகட்டுவதாக இருக்க வேண்டும் என்றும் பணிக்கிறது.
  5. இத்தகைய விலை வைக்கும் அதிகாரம் கொண்ட தன்னாட்சி அமைப்பு ஒன்று உருவாகவும், அந்த அமைப்பே நீர் நிர்வாகம்,நீர் பங்கீடு அதன் வரவு-செலவுகளை பார்த்துக்கொள்ளவும் இந்த வரைவு சட்டம் வகை செய்கிறது. (இந்த காரியங்களை இந்த அமைப்பு நேரடியாகவோ, ஒப்பந்தம்விட்டோ செயல்படுத்தலாம்)
  6. மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் நீருக்கு ஒரு விலை வைத்து, ஏற்கனவே பெற்ற நன்னீரின் விலையில் மறுபயன்பாட்டுக்கு உள்ளாகும் நீரின் விலையை குறைத்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு.
  7. நீர்வழிப்பாதையை பராமரிக்கவும், அதன் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர் ஆதாரங்கள் மாசுபடுவதை தடுக்கவும், நிலத்தடி நீர் தூய்மையை உறுதிபடுத்தவும் அதற்கான செலவுகளையும் பயனாளிகளிடம் இருந்து வசூலிக்க வகைசெய்கிறது.
  8. நீர் வழிப்பாதைகள் மீதான ஆக்கிரமிப்புகள்,திசை மாற்றப்படும் நீரோட்டங்கள் போன்றவைகளை எவ்வளவு மீட்டெடுக்க முடியுமோ அவ்வளவு மீட்டெடுக்க வேண்டும் என்கிறது.
  9. நீர் மூலங்கள் மாசுபட்டிருப்பதை உறுதிசெய்வதோடு, முறையான மூன்றாம் நபர் தணிக்கைக்கு உள்ளாக்கி, நீராதாரங்களை மாசுபடுத்துபவர்களுக்கு அந்த ஆதாரங்களை சுத்திகரிப்பு செய்ய தேவையான அளவு அபராதம் விதிக்க வகைசெய்கிறது.
  10. நிலத்தடி நீர் சுத்திகரிப்பு கடினமானது என்பதால் முடிந்த வரை எந்த காரணிகளாலும் அவை மாசுபடாது பாதுகாக்க வேண்டுமேன்கிறது.
  11. நீராதார கட்டமைப்புகள் தொடர்ச்சியாக பராமரிக்கபடுவதோடு, அந்த பராமரிப்பு செலவுகளை உள்ளடக்கியதாக நீர் கொள்முதல் விலைகள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். நீராதார கட்டமைப்பை எற்படுத்துபவர்களே ( தனி அமைப்போ / ஒப்பந்த நிறுவனமோ) "குறிப்பிட்ட" காலம் அதனை செம்மையாக பராமரித்து ஒப்பந்த காலத்திற்கு பிறகு அதே தரத்துடன் திருப்பி தரவேண்டும் என்கிறது.
  12. நீராதார கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தில் உள்ளீடப்படும் "சக்தி" அதன் மூலம் கிடைக்கும் "பயனு"க்கு நேர் தகவாய் அமைய வேண்டும். பஞ்சாயத்துகள்,நகராட்சிகள், மாநகராட்சிகள், நீர் பயனாளர் குழுமங்கள் போன்றவை "நீராதார பராமரிப்பு திட்டமிடல் மற்றும் செயலாக்கங்களில்" ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டுகிறது.
  13. நீராதார கட்டமைப்பை மேம்படுத்தும் பொழுது பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு தர வேண்டிய மறுவாழ்வு நிதியானது, அத்தகைய நீராதார திட்டங்களால் பயனடைய போகின்றவர்களால் நீருக்கான விலை மூலம், (பகுதியளவேணும்) ஈடுசெய்யப்பட வேண்டும்.
  14. வெள்ள அபாய நிலங்கள் அனைத்தையும் பாதுகாப்பது நடைமுறை சாத்தியமில்லை என்பதால், வெள்ளத்தோடு ஒத்திசைந்து செய்யக்கூடிய முறைகளை கையாள வேண்டும்! அதாவது வரலாற்று ரீதியான வெள்ளபெருக்க இடங்களை மையமிட்டு மீட்ப்புபணிகளை திட்டமிடல் வேண்டும்.
  15. திடீர் வெள்ளத்தால் ஏற்படும் மண் அரிப்பை தவிர்க்க , கரைகள் வாய்க்கால்கள், போன்றவற்றை முறையாக திட்டமிட்டு பராமரித்து, செப்பனிட்டு காத்து வரவேண்டும்! ஏனெனில் பருவநிலை மாற்றங்கள் கணிக்கமுடியாத வகையில் மாறிவருகிறது !
  16. நகர்புற மற்றும் கிராமபுறங்களிடையே நிலவும் நீர் பகிர்மான சமனற்ற தன்மைகள் நீக்கபடல் வேண்டுமென்கிறது!
  17. கிராமப்புற நிலத்தடி நீர் மாசுப்பாட்டை கருத்தில் கொண்டு முறையான மேல் நீர் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், அதோடு நிலத்தடி நீர் மாசை போக்கும் வழிமுறைகள் கையாளப்படவேண்டும்.
  18. நகர்புற குடிநீர் தேவை மற்றும் இதர தேவைகள் பிரித்தறியப்பட்டு, மறுசுழற்சி முறைகளை திட்டமிட்டு நீர் வழங்கு முறைகள் உருவாக்க படல் வேண்டும்.
  19. நீர் குறைவுள்ள இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான நீரை எடுத்துகொள்ளும் போது, குறிப்பிட அளவு தரத்தில் அதே நீரை சுத்திகரித்து தரல் வேண்டுமென்கிறது!
  20. நீர் ஒழுங்காற்று ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும், அமைக்கப்பட்டு இந்த வரைவு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளின் படி செயல்படுவதோடு, நீருக்கான விலை நிர்ணயம், பராமரிப்பு முறைகளின் தர நிர்ணயம், நீர் பங்கீடு தொடர்பாக மற்ற மாநிலங்கிளிடையே நடக்கும் பிரச்சனைகளில் தீர்வை எட்ட முயல்வது போன்றவற்றை செய்யகூடிய தன்னாட்சி அமைப்பாக செயல் பட வழி வகை செய்கிறது!
  21. நீர்ந்தர நீர் சிக்கல்கள் தீர்வு மையமொன்று மத்திய அரசால் நிறுவப்பட்டு மாநிலங்களுக்கிடையே நீர் சிக்கல்களை தீர்க்க நடுவர் மற்றும் சமரச அமைப்பாக செயல் பட வேண்டும்.
  22. நீர் சேவைகள் (வழங்குதல்,பராமரித்தல்) விடயத்தில் அரசானது தனது "சேவை வழங்குவோர்" என்ற நிலையில் இருந்து, "சேவையை ஒழுங்கு செய்வோர் " என்ற நிலைக்கு முன்னேற வேண்டும். அதாவது புகழ் பெற்ற "“Public Private Partnership " முறைக்கு அரசு மாறவேண்டுமென பணிக்கிறது!
  23. ஒருங்கினைந்த நீர்வள மேலாண்மை மூலம் திட்டமிடல், வளர்ச்சி போன்றவை செயலபடுத்தபடவேண்டும் என்கிறது .
  24. "தேசிய நீர் தகவலியல் மையம்" ஒன்றை ஏற்படுத்தி நீர் பற்றிய அத்தனை தகவல்களையும் சேகரிக்கவும் ,பாதுகாக்கவும், பயன்படுத்தவுமாய் இருந்திடவிழைகிறது.
  25. நீர் சார் "ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி" தொழில்நுட்பங்களை வளர்தெடுப்பது, பிற நாடுகளில் உள்ள மேம்பட்ட உத்திகள் போன்றவற்றில் பயிற்சி, தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற நீராராய்ச்சி மையம் ஒன்றை நிறுவி கொள்கை முடிவுகள் எடுக்கும் அதிகாரம் தருவது போன்றவைகளையும் இந்த சட்ட முன் வடிவு வரைமுறை செய்கிறது!
மேலே பார்த்த ஒவ்வொரு புள்ளியும் அந்த வரைவு சட்டத்தில் முக்கியமானவை என நான் கருதியவை மட்டுமே! இன்னும் முக்கியமான விடயங்கள் என் பார்வை தாண்டி போயிருக்கலாம் ! இருப்பின் சுட்டுங்கள் !

சரி எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு, இதுக்கு ஏன் "தண்ணீர் தனியார்மயம்" "நீருக்கு விலை" "நீராதாரத்தை விற்கும் அரசாங்கம்' போன்ற குமுறல்கள் என்ற "நியாமான" கேள்வி உங்கள் மனதில் எழலாம்! நிச்சியம் எழவேண்டும்! ஏன் எனில் மேல சுட்டப்பட்டிருக்கும் புள்ளிகள் அந்த வரைவு சட்டத்தின் "முக்கியமென கருதப்பட்டவைகளின்" மொழிபெயர்ப்பே!  Yes! whatever said above is just Translation, not Interpretation, or how it can be interpreted.

இந்த விளங்கிக்கொள்ளும் முறையில் தான் பல்வேறு சூட்சமங்கள் ஒளித்துவைக்க பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்! சரி அவர்களின் பயம் நியாயமானதா? இந்த வரைவு சட்டம் பற்றி எனது தனிப்பட்ட கருத்து என்ன ? ஏன் ?

கேள்விக்கான விடைகள் அடுத்த பதிவில்.....!! 


(சரி "நீரும் தமிழரும்" தானே பதிவின் தலைப்பு! கட்டுரை இப்போது நீரை மட்டுமே கட்டிக்கொண்டு, தமிழரை கழட்டிவிட்டுவிட்டதே? உங்கள் கேள்வி புரிகிறது!
பதில்: இந்திய தேசத்தோடு இந்த கட்டுரை வெளியிடப்படும் நொடி வரை தமிழகம் இணைந்திருப்பதாலும், அதன் தொடர்ச்சியாக இந்த வரைவு சட்டம், அதன் பயன் மற்றும் பாதகங்கள் தமிழர்களுக்கும் பொருந்தும் என்பதாலும், இதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் பல தமிழர் தம் நிலங்களில் முன்னாளில் செயல்வடிவில் இருந்தது என்பதாலும் இந்த "குறிப்பட்ட கட்டுரை" தமிழரோடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது!)

6 comments:

  1. see some article from the following url. earlier Australia had issue with water.

    after the water crisis, Australia government introduced and still following strictly the water crisis management and water resources management.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும்
      \\ http://latimesblogs.latimes.com/greenspace/2010/01/australian-water-crisis-provides-clues-for-california-at-gday-usa.html \\....

      பல நாடுகளில் நீர் முகாமை பேணப்பட்டு வருகிறது.

      Delete
  2. நன்னீரைத் தேவையற்று வீணாக்குவதைத் தடுக்க முடியும்.

    ReplyDelete
  3. முதல் வருகை மூழ்கி எழுத்து போகிறேன்.. நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தவறுகள் இருப்பின் சுட்டுங்கள்!, தரவுகள் இருப்பின் தந்து உதவுங்கள்!

      "பதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்ன?-ஒரு சமகால அலசல்" -
      உங்கள் பதிவு படித்தேன்! இன்னும்படிக்க ஆர்வம் கொண்டுள்ளேன்.

      Delete