Thursday, February 09, 2012

நீரும் தமிழரும் – 4


இனிவரும் பகுதிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை காண்போம்! ஆங்காங்கே பழந்தமிழர் தம் அறிவையும் நம் தவறுகளுக்கு மாற்றாக அவர்கள் கைகொண்ட எளிய முறைகளையும் காணலாம்! அதை செய்! இதை செய்! என்ற அறிவுரைகள் இருக்காது. தவறுகள் இருக்கும், அதன் விளைவுகள் இருக்கும்.ஓர்ந்து பார்த்து செய்யவேண்டியதை முடிவு செய்து செய்யவேண்டியது அவரவர் விருப்பம். பழம்பெருமைகள் இருக்காது என்பதால் பதிவுகளின் சுவையாரம் குறையலாம்! ஆனால் பழம்பெருமை பேசிப்பேசி வெறும் பேச்சோடு நின்றுவிடுகிறோமே! செயல்படுவது யார்? செயல்படாதிருந்தால் நம் பெருமை யார் பேசுவார்?

பண்டைய தமிழர் தம் மதி நுட்பங்களில் நான் தொட்டவை வெகு சில, விட்டவை மிகப்பல! உதாரனத்திற்க்கு கோயிலுக்கு அருகில் குளம் வெட்டி அதை புனிதமாக்கி, பொது சொத்தாக்கி, எத்துனை மதினுட்பமாய் காத்தார்கள் நம் தாத்தர்கள்! தமிழகத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த நீர் தேக்கங்கள்/ ஏரிகள் எண்ணிக்கை 49000!!! இப்போது இருப்பவை எத்தனை ?அதில் செயல்படும் தன்மையுள்ளவை எத்தனை? நீர் வரத்து வாய்க்கால்களோடு இன்னும் தொடர்பில் உள்ளவை எத்தனை? என கணக்கிட்டால் சில ஆயிரங்கள் தேறலாம்!! அவ்வளவே !! மிச்சமெல்லாம் என்ன ஆனது ? கான்கிரீட் வீடுகள் ஆயின ! புறம்போக்கு நிலங்கள் ஆயின! ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி சாலை, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆயின! சாக்கடைகள் என்றாகின! ஆலை கழிவுகள் கலந்த ஆறுகள் நாற்றமெடுத்து, நோய்பரப்பி, ஓட்டம் தடைபட்டு, ஒன்றுக்கும் பயனற்று, வீணாய் !!!
இனி செய்ய வேண்டியதென்ன? கொஞ்சம் ஆழ்ந்து நோக்குவோம். எதிர்கால சந்ததிக்கு என்ன வைத்துவிட்டு போகப் போகிறோம். தண்ணீரையா?இல்லை நீரற்ற ஆழ்துளை கிணறுகள் எனும் பெயரில் சவக்குழிகளையா?நம் முன்னோர் வெட்டிய குளங்களை மீட்டெடுப்போமா? ஆக்கிரமிக்கப்பட்ட அத்தனை நீர்நிலைகளையும் மீட்டுருவாக்குவோமா? இழந்த நீர் வழிப்பாதைகளை தேடி ஒரு பயணம் போவோமா ? மேற்ச்சொன்ன எல்லாம் செய்யவேண்டும் தான் ஆனால் அதன் முன்னர் செய்திட பல வேலைகள் உண்டு, மிக சிறிய வேலைகள். நீங்களும் நானும் பங்களிக்க கூடிய வேலைகள். அவை என்ன, இதோ சில!
  1. குழாயை திறந்தபடி பல் துலக்குவது/முகம் கழுவுவது போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் ஒரு முறை வீணடிக்கும் நன்னீர் ஆதாரம் ஒரு வேளை குளியலுக்கு தேவையான நீரை மீட்டுத்தரும்!
  2. தண்ணீரை பிடித்து வைத்துகொண்டு குளிக்கும்போது “Shower”ல் குளிக்க பயன்படுத்தும் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துகிறோம்!
  3. “Flush” வகையிலான கழிவறைகளில் ஒரு நாளில் வீணாகும் நன்னீரில் ஒரு குடும்பம் ஒரு வாரம் கூட சமையல் செய்துவிடலாம்!
  4. சொட்டு சொட்டாக வடியும் குழாயை நன்றாக அடைத்தாலோ/வேறு குழாய் மாற்றினாலோ ஒரு குழாயில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு வீணாகும் நீரைக் கொண்டு மூன்று மனிதர்கள் கொண்ட குடும்பத்தின்  ஒரு நாளைய தண்ணீர் தேவையை சேமித்துவிடலாம்!
  5. அரசாங்கம் வழங்கும் குழாய் நீரில் தேவைபோக மீதியை குழாயை அடைத்து சேமிப்பதன் மூலம், கோடை கால நீர் தேவையை அரசாங்கமே தீர்க்கும்படி செய்திடலாம்!(ஆழ்துளை கிணறும் வேண்டாம், அதில் நீர் இறைக்க மின்சாரமும் வேண்டாம்)
  6. மழைநீர் சேகரிப்பு கலன்களை வீடுகளில் முறையாக அமைப்பதன் மூலம் இயற்கையின் கொடையை சேமித்து நிலத்தடி நீர்வளம் பெருக்கலாம்.
  7. அதிக நுரை வரும் சோப்பு துகள்களால் மட்டுமே துணிகள் நன்று வெளுக்கும் என்ற மதிமயக்கு விளம்பரங்களுக்கு மயங்கி நாம் இழப்பது அறிவையும், பணத்தையும் மட்டுமல்ல, அந்த நுரைகள் போகும் வரை அலச தேவைப்படும் நீரையும் தான்!
  8. உடைப்பெடுக்கும் தண்ணீர் குழாய்கள் பல உடனடியாக சரி செய்யப்படாமல் வீணாகும் தண்ணீர் கொண்டு ஒரு ஊரே ஒரு நாள் வாழ்ந்திடலாம்.உடைப்பெடுத்த குழாய்கள் தீப்பிடித்த பக்கத்து வீடு போல! உடனடி கவனம்!
  9. முடிந்த வரை நீர்நிலைகள் அசுத்தப்படாமல் காக்கலாம்! சாயக்கழிவை எதிர்த்து போராட வேண்டாம், சாக்கடை கழிவுகள் கலக்காதபடி பார்த்துக்கொள்ளலாம்.குப்பை கொட்டாமல் இருக்கலாம்.
  10. வீட்டுக் கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால் எவ்வளவோ சேமிக்கலாம்! அடுக்குமாடி வீடுகளில் பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு முறைமைகளை நிறுவி முன்மாதிரி கட்டிடங்களாய் மாற்றிடலாம்.
மேற்கூறிய வழிமுறைகள் அனைத்தும் தனி மனிதர் சார்ந்தது! ஒவ்வொரு தனி மனிதரும் எவர் துணையுமின்றி செய்திடக்கூடிய காரியங்கள்! இனி வரும் பதிவுகளில் தனிமனிதர்,சமூகம்,அரசு என பலரும் இனைந்து செய்யவேண்டிய/செய்யத்தவறிய விடயங்கள் பற்றி காணலாம்.
கொசுறு:இந்த பதிவை ஆரம்பிக்கையில் எந்த அறிவோ/உள்ளீடுகளோ இல்லாது தொடங்கினேன். ஆனால் இதை இத்தனை பேர் படிக்கிறார்கள் என்ற பொறுப்புணர்ச்சியின் காரணமாக சில புத்தகங்கள் வாங்கி படிக்க தொடங்கினேன்!
உங்கள் பார்வைக்கு அவை இதோ:பழ.கோமதிநாயகம் அவர்களின் ”தமிழர் பாசன வரலாறு” “தமிழகம்…தாகம்…தண்ணீர் தீருமா..?” “தாமிரவருணி” ஆகிய புத்தகங்கள்!

ஐந்தாம் பாகம் - நீரும் தமிழரும் ௫ (5)

3 comments:

  1. சாட்டை சொடுக்கும் நண்பருக்கு

    நல்ல சொல்வீச்சும், கருத்தாழமும், வாழும் பூமியின் மீது அக்கறையும் கொண்ட நல்ல கட்டுரைகள். வாழ்த்துக்கள்.

    நம் நீராதாரம் தொலைவது கண்டு வருந்தும் பலருள், இதை மீட்க, வருந்துவது தவிர, நண்பர்களிடம் புலம்புவது தவிர, இணையதளங்களில், புத்தகங்களில் எழுதுவது தவிர வேறு ஏதாவது செய்ய இயலுமா என்று யோசித்துக்கொண்டிருப்போருள் நானும் ஒருத்தி. உங்கள் ஆராய்ச்சியில், நம் ஏரிகளை, குளங்களை மீட்டெடுக்க நாம் இப்பொழுது செயலாக்கக்கூடிய திட்டங்கள் கண்டறிந்தீர்கள் என்றால் எனக்குத் தெரிவிக்க வேண்டுகின்றேன்.

    அன்புடன்
    கீதா ஜஸ்டின்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றிகள்! ஆக்கிரமிக்கப்பட்ட, அழிந்துவிட்ட நீராதாரத்தை மீட்டு எடுப்பதற்க்கான வழிமுறைகள் பற்றி, அதற்க்கான தனிமனித/சமூக செயல்பாடு பற்றி வரும் கட்டுரைகளில் எழுதும் உத்தேசம் இருக்கிறது!

      விரைவில் அலசுவோம் அது குறித்து! அடுத்த பதிவு "நீர் மேலாண்மையில் தனியார் பங்களிப்பு" என்று வறிவு சட்டம் பற்றியது. ஆண்டு வறிவு சட்டம் தரும் முன்னெடுப்புகள் உங்களுக்கு உதவலாம்! இதோ தொடுப்பு : http://mowr.gov.in/writereaddata/linkimages/DraftNWP2012_English9353289094.pdf

      -ரகு

      Delete
    2. தகவலுக்கு நன்றி. அடுத்த கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.

      ஒத்த கருத்து கொண்ட நண்பர்களை இணைத்து செயலாக்க இயலுமானால் மிகவும் மகிழ்வேன்.

      Delete