Thursday, May 10, 2012

ஊரோடிய கதைகள் - கோவா -2

செங்கல் ஏற்றிய சரக்குந்துகளில் சிவப்பு நிற அழுக்கு துண்டை விரித்து கையை தலையணையாக்கி பாதைகளின் மேடு பள்ளம், சுட்டெரிக்கும் வெயில் என ஏதும் அறியாது உறங்கியபடியே பயணிக்கும் கூலிகளை பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். எப்படி உறங்க முடிகிறது இவர்களால் என்ற ஆச்சரியகுறியுடனான கேள்விக்குறி எழ பலமுறை பதில் தெரியாது விழித்திருக்கிறேன்.


உழைத்த களைப்பில் உச்சிவெயிலை உதாசீனப்படுத்தி உறங்குவது சாத்தியமே என்பதை புரியவைத்தது பயணக்களைப்பு பரிசளித்த இந்த பேய்தூக்கம்.

ண்பகல் பன்னிரெண்டு மணிக்கு படுக்கையில் சாய்ந்தவர்கள், பிற்பகல் இரண்டு மணிக்கெல்லாம் "அலாரம்" அடித்தது போல எழுந்து விட்டோம். பசி வயிற்றை கிள்ளி அலாரம் அடித்திருந்தது. எப்போதும் தாமதமாய் கிளம்புகிறவன் கூட சீக்கிரமாய் கிளம்பிய போது உணர்ந்தேன், பசி நல்லது!!

என்னதான் உலகின் நாகரீக மாற்றங்களை எளிதாக ஏற்றுகொள்ள மனது பழகிவிட்டாலும், உணவு விசயத்தை பொறுத்தவரை நாம் எல்லோருமே கட்டுபெட்டிகள் தான். பத்தாயிரம் மைல் கடந்து வந்து சென்னையின் வீதிகளில் "பீசா மற்றும் பர்கர்" தேடியலையும் மேற்கு நாட்டவர் போல, கோவா வீதிகளில் "இட்லி-தோசை" தேடிகொண்டிருந்தோம். உணவுதான் வேறே தவிர உணவின் மீதான உணர்வு உலகம் முழுக்க ஒன்றுதான் போலும்.

சில உணவகங்களில் ஆறிப்போன இட்லியை கொண்டு வர கூட அரை மணி நேரம் ஏன் ஆகிறது? என்ற கேள்விக்கு எப்போதும் பதில் கிடைப்பதில்லை. ஏதோ இட்லி-தோசை கிடைத்ததே, அது வரை சந்தோசம்! அடுத்த நொடியே அந்த சந்தோசத்திலும் இடி விழுந்தது. சாம்பாரில் சர்க்கரை!! "சத்தியமாக இது கர்னாடக சமையல் முறைதான்" - என் இயல்பான கர்னாடக வெறுப்புக்கு வலுச்சேர்க்க இன்னும் ஒரு காரணம் சேர்ந்துகொண்டது!. "இனவெறுப்புகள்" இப்படி சிறுக சிறுகத்தான் இரத்தத்தில் ஏறுகின்றன, ஒரே நாளில் யாரோடும் பகை கொள்வதில்லை மனம்.

கோவா வந்தடைந்த உடனே கவனித்த சில விடயங்கள், பெரும்பாலான தங்கும் விடுதிகளில் "பார்க்கிங்" வசதியில்லை, பார்க்கிங் வசதி செய்து கொடுத்தே பெரும்பாலான சாலைகள் ஒரு வழிச் சாலையாகிவிட்டன, பெரும்பாலான பெண்களின் உடை "டி-சர்ட் & சார்ட்ஸ்".

உணவிற்கு பிறகு, பனாஜியில் இருந்து காலங்குடே(Calangute) கடற்கரை நோக்கி பயணத்தை தொடங்கினோம். நெடிய பாதை, ஆங்காங்கே வளைவுகள் என்று தெரியாத அளவிற்கு மிகப் பெரிய வளைவுகள். சீரான வேகத்தில் பயணிப்பதற்கு ஏற்ற பாதை. சுற்றுலாதான் மாநிலத்தின் வளர்ச்சிக்கான பாதை என்பதுணர்ந்து சமைக்கப்பட்டது போல் காட்சியளிக்கிறது கோவாவின் அத்தனை சாலைகளும்.

"ண்ணா 'கைடுவேணுமாண்ணா?" என எங்கள் வாகனத்தை இருசக்கர வாகனங்களில் தொடர்ச்சியாய் துரத்தி வந்து  தமிழ் பேசிய கொங்கனி இளைஞர்கள் விவரிக்கவியலாத வியப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். நம் மொழியை எப்படி அறிந்தார்கள் இவர்கள் என்ற யோசனைக்கு வண்டியின் "எண்" பலகை பதிலளித்தது. வெளிமாநிலம் செல்கையில் நம் வாகனங்கள் நம்மோடு சேர்த்து நம் மொழியையும் சுமந்து செல்கிறதென்பதை உணர்ந்த போது, கண்ணியமாய் இருக்க வேண்டும் என்றொரு கருத்து வந்துதித்தது புத்திக்குள்.

வேற்றுமொழி தேசங்களில் நமது நன்னடத்தை நம் "மொழிக்கும் இனத்திற்கும்நாம் தேடித்தரும் நல் விளம்பரம் அல்லாது வேறென்ன?

காலங்குடே கடற்கரையில் வாகனம் நிறுத்தும் போது தான் தவறான நேரத்தில் பயணம் மேற்கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. வாகன நிறுத்தமெங்கும் "சுற்றுலா பேருந்துகள்". பேருந்துகளில் சுற்றுலா அழைத்து செல்லும் அமைப்பாளர்கள், பெரும்பாலும் "சீசனற்ற" காலத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். பல வகைகளிலும் அவர்களுக்கு அதுவே சௌகரியம். நல்லவேளையாக பெருவாரியான தேனிலவு தம்பதிகளின் வருகை "கிளுகிளுப்பானதொரு சீசனை" உண்டுபண்ணியிருந்தது.

முட்டி வரையிலான கால்சட்டை, இடுப்பை மறைக்கவா... வேண்டாமா... எனும் கேள்வியை 'தூக்கி' நிற்கும் மேல்சட்டை, முழங்கால் வரை வரையப்பட்ட "மெஹந்தி", பாதி முழங்கைவரை இழையோடும் புது வளையல்கள் என அணிந்த வட இந்திய பெண்களும், எதிர்படும் ஆண்களின் "அளவெடுக்கும்" பார்வைகளில் இருந்து தம் இணையை காப்பாற்றவியலாத கையறு நிலையை ஏற்க பழகிவிட்டிருந்த வட இந்திய ஆண்களும், தாங்கள் தேனிலவு தம்பதிகள் என்பதை எந்த விளம்பரமும் இன்றி தம் நடைகளின் மூலமாகவே பிரதிபலித்து கொண்டிருந்தார்கள்.

"சூழ்நிலை" எப்படியிருக்கிறது என்பதை "அளவெடுக்க", காலங்குடேயில் இருந்து பாகா கடற்கரை வரை நடந்தே ஒரு பயணம் போனோம்.

மாலை வெயில், கண்ணுக்கெட்டிய தூரம் கடல், தூரத்தில் மலை, நடுக்கடல் எனத்தெரியும் பகுதியில் "நீர் சறுக்கு வண்டிகள்"(Water Skating Bikes), கடற்கரை முழுக்க நாற்காலிகள் விரவிக்கிடக்க, மது மற்றும் உணவு கூடங்களில் ஒலித்து கொண்டிருந்த ஹிந்திபாடல்களின் இடையிடையே குதூகலத்தை இரட்டிப்பாக்கிய "கொலைவெறியும்" "ஆடாம ஜெயிப்போமடா" போன்ற "தெள்ளு தமிழ்" பாடல்கள்வெகு அரிதாக காணப்பட்ட வெளிநாட்டு பயணிகள், தொடர்ச்சியாக ரோந்து சுற்றி வந்த "உயிர் பாதுகாப்பு வாகனங்கள்", நீராடிய களைப்பில் அலை வந்து தழுவிச்செல்லும் தூரத்தில் கைகள் பிணைத்து, கண்கள் மூடி, இடம்-பொருள் மறந்து, மணல் பரப்பில் இருவரொருவராய் மாறிக்கிடந்த இணைகள், கோவா இந்திய தேசத்தில் எவ்வாறு இணைக்கபட்டதென்று ஏதும் ஆறியாது  பீர் பாட்டில் சகிதம் தாம் அறிந்த கோவா வரலாற்றை பிரசங்கம் செய்து கொண்டிருந்த மேதாவிகள், ஆதவன் மறைவதை மேலைக்கடலில் பார்த்தபடி கணவன் அருந்தும் மதுவின் நிறத்திலேயே பழரசத்தையோ, குளிர்பானத்தையோஅல்லது மதுபானத்தையோ வாங்கி வைத்திருந்த மனைவிகள், ஏக்க பெருமூச்சுடன் எல்லோரையும் வேடிக்கை பார்த்த படி நடந்து கொண்டிருந்த எண்ணற்ற "என்" போன்றோர் என விரவி கிடந்ததந்த கடற்கரை.

அந்த நீண்ட கடற்கரை முழுக்க "பறக்கிறீர்களா ? ரூ.300 தான், நீர் சறுக்குகிறீர்களா ? ரூ.200 தான்என்ற குரல்கள் சரியாக ஆறு மணிக்கெல்லாம் நின்று விட்டன. சாகசங்களுக்கான நேரம் முடிந்த விட்ட நொடிகளில், சல்லாபத்துக்கான நொடிகள் பிறந்து விடும் பூமிதான் கோவா!. "பார்ட்டி ஹே சாப், டான்ஸ் பார்ட்டி சாப்! மஜா ஆயேகா" போன்ற அழைப்புகள் பத்தடிக்கு ஒரு முறை ஒலிக்கத்தொடங்கியது. முற்றும் தீராத பயண களைப்பும், மணற்பரப்பில் எதிர் காற்றில் நடை பயின்ற உடல் அலுப்பும் ஓய்வை எதிர்பார்க்க, "பார்ட்டிக்கு" போவது பற்றி பரிசீலிக்க தொடங்கியிருந்தது ஆசை! ஆசையும் களைப்பும் "பசி வந்திட பறக்கும் பத்து"களில் அடக்கம் என்பதால் பசியாறிவிட்டு முடிவேடுத்து கொள்ளலாம் என முடிவெடுத்தோம்.

வெறும் உணவை உண்ண கோவா வரை செல்வானேன்? மதுவுடன் கூடிய உணவு! ஒரு லார்ஜ் வோட்கா உள்ளிறங்கியது! இனி நானெடுக்கும் முடிவுகளுக்கு சரி பங்கு வோட்காவும் பொறுப்பு என்று புத்திசாலிதனமாக தப்பித்து கொள்ளலாம். ஆனால் போதையில் இருக்கும் ஒருவன் தான் உண்மையில் எந்த குறுக்கீடுகளும் அற்று சுயமாய் முடிவெடுப்பவன். 

உணவுகள் தீரத்தீர முடிவுகள் தெளிவாகியிருந்தது. மூன்று பேர் அறைக்கு செல்வதாகவும், மற்றவர்கள் மீண்டும் கடற்கரைக்கு செல்வதாகவும் முடிவானது. போதை தலைக்கேறி, ஆசை வழிநடக்க, மொழியறியா இடமொன்றில், பின்னிரவு பொழுதில் ஒரு பயணம் தேவைதானா? என்ற கேள்விகள் யாருக்குமே எழாதது வியப்பே! 

இது எல்லாவற்றையும் விட, எந்த குழுவில் நான் இருந்தேன் ? என்பது எனக்கே பெருவியப்பாய் இருந்தது.

தொடரும்...

- ரகு

முதல் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௧(1)
இரண்டாம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௨(2)
மூன்றாம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௩(3)
நான்காம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௪ (4)

22 comments:

  1. பாகா, கலங்கூட், கொலைவெறி, மங்காத்தா பாடல்கள் எனக்கு சற்றுமுன் கோவா சென்றுவந்த கல்வி (?!) சுற்றுலாவை நினைவுப்படுத்திவிட்டது! இனி நீங்கள் எழுதும் அடுத்த பதிவுகளில் என்னை நானே பொருத்திப் பார்க்கவேண்டியிருப்பதால் கண்டிப்பாக படிக்க தவறிவிடமாட்டேன்! மேலும் மேலும் கலக்க வாழ்த்துக்கள் :) எதிர்பார்ப்புடன்....!! மனோஜ் @vandavaalam

    ReplyDelete
    Replies
    1. கல்வி சுற்றுலாவா? கலவி சுற்றுலான்னு படிச்சு தொலைச்சிட்டேன் அவ்வ்வ்

      Delete
  2. //உணவுதான் வேறே தவிர உணவின் மீதான உணர்வு உலகம் முழுக்க ஒன்றுதான் போலும்.// - மறுக்க இயலா உண்மை..! # ராக்கெட்டு

    ReplyDelete
    Replies
    1. உலகின் எல்லா மூலைகளிலும் "இட்லி தோசை" தேடும் நம்மவரை குறை சொல்லும் நம்மவர்கள், "பீசா பர்கர்" தேடும் வெளிநாட்டுக்காரனை தவறாய் எண்ணுவதில்லை. உலகோடு ஒன்றி வாழ வேண்டும் என்று ஒவ்வாத உணவை உண்ணுவது என்ன வகை பண்பாடோ. எனக்கு தெரிந்து வெளிநாட்டினர்கள் ஒவ்வாததை செய்வதை தவிர்கிறார்கள்

      Delete
  3. ரசித்து, சிலிர்த்து, சிரித்துப் படித்தேன்.. அருமையான நடை.. வாழ்த்துக்கள் மச்சி.!!

    ReplyDelete
  4. ///இனி நானெடுக்கும் முடிவுகளுக்கு சரி பங்கு வோட்காவும் பொறுப்பு என்று புத்திசாலிதனமாக தப்பித்து கொள்ளலாம். ஆனால் போதையில் இருக்கும் ஒருவன் தான் உண்மையில் எந்த குறுக்கீடுகளும் அற்று சுயமாய் முடிவெடுப்பவன். ///
    நச்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மச்சி! /// உன்ன நான் புகழ்வதும், என்னை நீ புகழ்வதும் /// யாரவது "தில்லான மோகனாம்பாள்" செந்தில் ஜோக் மாதிரி நெனச்சுக்க போறாங்க, அதுனால டிஸ்கி: போட்டு எழுதிரு மாப்பி :)))

      Delete
  5. முன்பு எழுதிய ரகுவா இது, நல்ல தேர்ச்சி எழுத்து நடையில் .. நீ வளருவாய் .. ஆசிகள் பல ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி! என் முதல் எழுத்துப்பிழை திருத்தர் நீங்கள்! எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

      Delete
  6. ஒரு சந்தேகம் ரகு சாட்டை என்ற பெயரில் இருந்த வலைத்தளம் இது தானே ?

    ReplyDelete
    Replies
    1. http://saattai.wordpress.com என்று இருந்தது, இப்போது இங்கு Blogspot-க்கு வந்துவிட்டேன்!

      Delete
  7. அருமையான நடை. நாங்களும் கோவாவை சுற்றி பார்த்த உணர்வு ..

    ReplyDelete
  8. இனிமே என்னையோ நட்டுவையோ இ.வா ன்னு சொன்னா அவ்ளோதான்! செம்ம நரேஷன். நிச்சயமாக காட்சிகள் கண்களுக்குள் விரிகிறது. அடுத்த பகுதிகளுக்கு காத்திருக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. வசிஷ்டர் வாயால் "என்னமோ" ரிஷி பட்டம் பெற்றது போல் உள்ளது. நன்றி குருவே!

      Delete
  9. அழகான நடையில், அற்புதமான பயணக்கட்டுரை.. அதுவும் கோவாவை ரசித்த மற்றும் அதை சொல்லிய விதம் மிக அருமை...

    கட்டுரை கொண்டு சென்ற விதம் இன்னும் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி இன்று உங்கள் பதிவுகளை எல்லாம் படித்துக் கொண்டு இருக்கிறேன்...

    ReplyDelete
  10. //சென்னையின் வீதிகளில் "பீசா மற்றும் பர்கர்" தேடியலையும் மேற்கு நாட்டவர் போல, கோவா வீதிகளில் "இட்லி-தோசை" தேடிகொண்டிருந்தோம்//
    இதை படிக்கும்போது திகில் கதை படிக்கிராமாதிரியே இருந்துச்சு ஏன்னா கர்நாடகா ட்ரிப் போன போது அனுபவித்த கொடுமை இதே தான் ;(( இங்க இருக்கும்போது கே எஃப் சி,டோமினோஸ்'க்கு தான் வெளில போவோம் வீட்லயே மத்தது கெடைக்கும் ட்ரிப்ஸ்ல அதெல்லாம் கெடைக்காது .

    ReplyDelete
  11. சிலர் போரடிப்பார்கள்..
    சிலர் உவமையால் தாளித்தெடுத்துவிடுவார்கள்..
    சிலர் தங்களின் தமிழறிவை முழுசா இங்கே புகுத்தி மண்டை காய வைப்பார்கள்..!

    இது ஏதுமில்லாமல்.., முன்னே சொன்ன மாதிரி, கற்பனைக்குள் உட்பட்ட வார்த்தைகளை தேர்ந்தெடுத்ததால்... எதிர்பார்ப்பை தூண்டுகிறது உங்களின் எழுத்துநடை..!
    அருமை.

    கடுகைப்போல் "நடப்பு" சிறிதேயானாலும்.. காரம் குறைவில்லை....!

    கோவாவில் கன்னட உணவகம் நிறைய இருக்கும்.. அதான்..! ஏதோ சாப்பிடக்கிடைத்ததே என எண்ணத் தோன்றும்.

    உண்மைதான் .............நாக்கு தானே எல்லாத்தையும் தீர்மானிக்கிறது..! உரிமையில் இருந்து உணவு வரை..!!

    செம்மண் பூமி .., குன்றுகள் நிறைந்த பகுதி.., கூடவே கடலும்..! வெக்கை பூமிக்கு இது போதும்..!

    ///வெளிமாநிலம் செல்கையில் நம் வாகனங்கள் நம்மோடு சேர்த்து நம் மொழியையும் சுமந்து செல்கிறதென்பதை உணர்ந்த போது/// சில இடையூறுகளையும் தவிர்க்க இது இடையூறாக இருக்கலாம்...!

    சமீபத்தில்.. வேளாங்கன்னியில் கண்டது.. KL ரெஜிஸ்ரேசன் வண்டியெல்லாம் ராஜா மரியாதைக்கு உட்படுத்தப்பட்டன.. பார்க்கிங் அசிசிக்கு பக்கமாக..! TN ரெஜிஸ்ரேசன் வண்டி பார்க்கிங் ஏரியால...! அதும் தமிழ் நாட்டிலே..! சரி வேணாம். விடுங்க..!

    "டேய்.. டேய்.. அங்க பாருடா"ன்னு குனிஞ்ச தல நிமிராம ரகசியமாய் நண்பனிடம் சொன்ன வார்த்தைகளும்.. , சரக்கு ஏற்றும் போதையை விட போதையேற்றும் பேதையை பார்த்த நர்த்தனமாடிய கண்களை பற்றியும்., எங்கு நோக்கினும் நீக்கமற நிறைந்த பச்சை குத்திய பெண்களைப்பத்தியும்.. குத்தும்... குத்திய இடத்தை பத்தியும்... ஏனோ சொல்லவில்லை.. ஒருவேளை.. அதான் காரணமோ..!

    இன்னும் நிறைய விஷயமிருக்கே..உங்களிடம்..!!

    ReplyDelete
    Replies
    1. மதிப்புரைக்கு நன்றிகள்.

      நாங்கள் போன காலம் நல்ல வெயில்காலம். காய்ந்து விட்டோம்.

      தமிழ் நாட்டில் மட்டும்தான் இத்தகைய நிகழ்வுகள் நிகழும். வந்தாரை வாழ வைக்கும் தேசமல்லவா.

      இன்னும் ஒன்னரை நாள் பயண அனுபவம் பாக்கி இருக்கு, அதில் எழுதிடலாம்.

      மீண்டும் நன்றிகள்

      Delete
  12. ஏயப்பா...எழுதின கைக்கு சுத்தி போட்டுக்கப்பா. அநியாயத்துக்கு வசீகரிக்கிறது இந்த எழுத்து நடை. அடுத்த பகுதிக்கு ஏங்க வைக்கிறது. அதுக்குள்ளே முடிஞ்சிடுச்சேன்னு ஒரு ஏமாற்றம் ஒவ்வொரு பகுதி முடிவிலும்.
    வாழ்த்துகள் கூடவே அடுத்த பகுதிக்கான எதிர்பார்ப்புகள்.

    ReplyDelete
  13. "சாம்பாரில் சர்க்கரை" போல் பயணக் கதை நல்லா இருந்துச்சி ன்னு கோவிச்சிப்பீங்களா?:)
    பின்னே என்னவாம்?
    போதையில்...."தொடரும்" ன்னு போடும் முன்ன, அடுத்த பெக் ஊத்திக்கிட்டு, அப்பறமாப் போடணும்; நீங்க அடுத்த பார்ட்டி பற்றிக் குறிப்பு குடுக்காம "தொடரும்" போடறீக!:)

    //சாகசங்களுக்கான நேரம் முடிந்த விட்ட நொடிகளில், சல்லாபத்துக்கான நொடிகள் பிறந்து விடும் பூமிதான் கோவா//
    இது புள்ள :))

    ReplyDelete
    Replies
    1. அடுத்து பார்ட்டி இருந்திருந்தா இப்படியா டுபாகூர் சஸ்பென்ஸ் வைப்பேன்! ஒன்னுயும் நடக்கல என்பதை எப்படி சொல்றதாம்?

      தத்துவமா புளிஞ்சு எழுதியிருந்தாலும் உம்மா கண்ணுக்கு படுறது எல்லாம் சிருங்கார ரசம் தான், அப்புறம் சாம்பர பத்திக் பேசுறது... :))

      நன்றி முருகா! அடுத்த பதிவுல சந்திப்போம் :))

      Delete