Thursday, February 09, 2012

நீரும் தமிழரும் – 3


சென்ற பதிவில், நதி நீரில் தமிழர் தம் அறிவியல் பார்த்தோம். இங்கு நீரில்லா தமிழர்களின் வாழ்வியல் பார்க்கலாம். அதென்ன நீரில்லா தமிழர்கள்? அக்கால தமிழகத்திலுமா நீருக்கு குறைவு ? காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தமிழ் கண்டதோர் வைகை, என மேவி ஓடிய ஆறுகளின் பூமியில் தண்ணீர் இல்லையா? என்ன உளறல் இது? உளறல் அல்ல! உண்மையே!  ஆம், தமிழர் நிலப்பரப்பு ஒன்றும் பஞ்சமே காணாத பூமியல்ல! இங்கும் பஞ்சங்கள் வந்ததுண்டு, ஆனால் அதை தம் அறிவால் வென்றவர்கள் தமிழர்கள்.
“கடலருகே வீற்றிருந்தும் கடுந்தாகம் வரும்பொழுதே
கடவுளெனும் ஒருவனது கைசரக்கு நினைவுவரும்…
……கடல் நீரே குடிநீராய் கடவுளவன் படைத்திருந்தால் 
அடிநீரை தேடி எந்த அரசாங்கம் செலவு செய்யும்
இந்த வரிகளுக்கு சொந்தகாரர் கண்ணதாசன்! நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வரிகள் இவை.
கடுந்தாகம் வரும் போதே!!!!!!!!!!!! அடி நீரை தேட வேண்டும் என்கிறார் கவிஞர். அக்கால தமிழர்களும் அதையே எண்ணி செயல்பட்டார்கள். நிலத்தடி நீர் என்பது மிக அரிதாகவே பயன்படுத்த பட வேண்டிய விடயம், அது விதை நெல் போல, பஞ்ச காலத்தில் விதை நெல்லை, பொங்கித்தின்ற கலாச்சாரங்கள் எல்லாமே அழிந்தேவிட்டன.விதை நெல்லை தின்பதை விட, விலை மதிப்பற்ற உயிர்களை இழந்த கலாச்சாரங்கள் தான் இன்று எஞ்சி இருக்கின்றன. ஏனெனில் விதைநெல் என்பது விலைமதிப்பற்றதையும் கடந்தது. நிலத்தடி நீரும் அது போலத்தான். ஆனால் இன்று ஆழ்துளை கிணறுகள் இல்லாத வீடு எது? விதை நெல்லை தின்று கொண்டிருக்கிறோம் மக்களே! கவனம்!!!
மழை பொய்த்துப்போய், ஆறு/குளங்கள் வறண்ட காலங்களில் அந்த நீர் படுகைகளில் சிறு சிறு பள்ளங்கள்/கிணறுகள் தோண்டுவார்கள், பெரிய/ஆழமான கிணறுகள் தோண்ட மாட்டார்கள், காரணம் அவர்களிடம் அத்தகைய தொழில்நுட்பம் இல்லாமல் அல்ல. இக்கால தமிழர்கள் போல்   தற்காலிக தீர்வுகளை நிரந்தர தீர்வுகளாக அவர்கள் ஒரு போதும் எண்ணியதில்லை. கிணறுகள் கூட ஊர்பொதுவாய் இருந்தது.தனி தனி கிணறுகள் வந்ததெல்லாம் பிற்பாடு தான்!, அது கூட வசதியின் ஒரு அடையாளமாய் தான்! கிணற்று நீர் குடிக்க மட்டுமே! பாசனத்திற்கு? அங்கு தான் மாற்றம் கண்டார்கள்! புன்செய் நிலங்கள்,நன்செய் நிலங்கள் என்ற பிரிவே நீர் தேவையை பொறுத்துதான் அமைத்தார்கள். அதிக நீர் தேவையுரும் நன்செய் உணவு வகைகள் பஞ்ச காலங்களில் விளைவிக்கப்படாது, குறைந்த நீரில் விளையும் புன்செய் விவசாயம் நடந்தது.நீருக்காக உண்ணும் உணவையே மாற்றிக்கொண்டார்கள்.
 “உதவி : விக்கிபீடியா :
“புஞ்சை தானியங்களுக்கு — பஞ்சம் தீர்க்கும் பஞ்சை தானியம் என்று பெயருண்டு.
நாம், அரிசியை 2 மாதம் சேமிக்கலாம். நெல்லை ஓராண்டு சேமிக்கலாம். ஆனால் புஞ்சை தானியங்களை 5 அல்லது 6 ஆண்டுகளுக்குச் சேமிக்கலாம்.”
இன்னும் சின்ன சின்ன மாற்றங்களாக நிறைய இருக்கிறது, உதாரணமாக வீட்டுக்கூரைகளில் வடியும் மழை நீரை பெரிய பெரிய பாத்திரங்களில் சேமித்து பல நாட்கள் வரை பயன்படுத்தியது(மழை நீரில் அத்தனை சீக்கிரம் புழுக்கள் வராது), ஆற்று படுகை மணல்களை வீடு கட்ட பயன்படுத்தாது, நதிகளின் உயிர் காத்தது என ஏராளம், ஏராளம். மொத்தத்தில் நாம் இன்று செய்யும் எதையும் அவர்கள் அன்று செய்யவில்லை, அவர்கள் செய்த எதையும் நாம் இன்று செய்யவில்லை. வானம் பார்த்த பூமி என்றழைக்கப்படும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு செல்பவர்கள் ஒன்றை கவனிக்கலாம். எண்ணிலடங்கா பனை மரங்கள் இந்த மாவட்டங்களுக்கே உரித்தானவை. அந்த மரத்தின் பயன்கள் மிக அதிகம் என்றாலும், இந்த கட்டுரையோடு தொடர்புடைய பயன்கள் என்னவெனில், அவை வளர நீர் தேவை மிக மிக குறைவு, ஆனால் நுங்கில் இருக்கும் நீர்ச்சத்து  மிக மிக அதிகம். அதே அளவு நீர் சத்துள்ள வாழைப்பழம் வளர பன்மடங்கு நீர் தேவை!
இப்படி தம் வாழ்நிலங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தம் பழக்க வழக்கங்களை மாற்றி கொண்டார்களே அன்றி, இயற்கையை மாற்றும் விஞ்ஞான வழிமுறைகளை கையாளவில்லை.ஆனால் இவர்களை காட்டுமிராண்டி கூட்டம் என்கிறது இயற்கையை மாற்றக்கிளம்பிய மற்றொரு கூட்டம் .இயற்கையை மாற்றுவதே விஞ்ஞானம் என்ற தப்பர்த்தம் செய்து கொண்டிருக்கும் அறிவாளிகள் தான் இன்று Kyoto Protocol போன்று, புது புது திட்டங்கள் கொண்டு வருகிறார்கள், அதாவது இருப்பதை கெடுத்துவிட்டு, கெட்டதை மீண்டும் நல்லதாக்குவதாம்! ஒருவேளை இதுதான்  Reverse Engineering போலும்! என்னமோ போங்க!
கிராமங்களில் மழை நீர் சேமிப்பு என்பது குடிதண்ணீர் குளங்களை மையமிட்டு இருக்கும். இன்றும் கிராமங்களுக்கு போய் பாருங்கள். குடியிருப்பு பகுதிகளில் இருந்து குளங்களுக்கான பாதை வாட்டமாகவே இருக்கும். எல்லா வீட்டு கூரைகளில் விழுகின்ற நீரும் அந்த பாதைகளின் வழியாக ஓடி ஊருனி/குளங்களை அடையும். அது மட்டுமல்ல,கூரைகளில் விழுகின்ற நீர் குறைவே, பாதைகளிலும், பொது இடங்களிலும் விழும் நீரே அதிகம்.இந்த நீரும் கூட சிறு வாய்கால்களின் வழி குளத்தை வந்தடையும் படி அமைத்திருப்பார்கள்.வரத்தை சேமித்தால் கொஞ்ச காலம் ஓட்டலாம். பஞ்ச காலத்தை எப்படி ஓட்டுவது. வாழ்முறைகளை மாற்றுவதன் மூலமே என்று, அன்றே  வாழ்ந்து எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்கள் தாம் நம் முன்னோர்கள்!
சரி சரி பழம்பெருமை போதும், அக்கால தமிழர்கள் பார்த்தாகி விட்டது! இக்கால தமிழர்கள் பார்ப்போமா? இதில் பார்க்க என்ன இருக்கிறது, இதுவரை பார்த்த எல்லாவற்றையும் இழந்த ஒரு கூட்டம். ஆமா அது தானே நம் இன்றைய நிலைக்கு சரியாக பொருந்தும். அதனால் இனி எதிர்கால தமிழர்கள் கைகொள்ள வேண்டியவைகள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
-எடு சாட்டை

நான்காம் பாகம் - நீரும் தமிழரும் - ௪ (4)

No comments:

Post a Comment