Friday, November 12, 2010

ஏன் வேண்டும் ஈழம்-1


1."ஈழம் என்று ஒரு நாடு ஏன் வேண்டும்?"

2."இந்த தமிழர்கள் ஏன் சிங்களவர்களோடு சேர்ந்து இணக்கமாக வாழக் கூடாது?"

3."ஏன் பல இனக்குழுக்கள் இணைந்த ஒரே தேசமாக வாழ மறுக்கின்றனர்?"

4."ஏன் இந்த தமிழர்கள் குருதி வெறி பிடித்துமண்ணாசை கொண்டு வாழ்கின்றனர்?" 

5."எண்பது சதவிகித மக்கள் வேறு இனக்குழுவாக இருக்கும் பொதுஇவர்கள் தனி நாடு கேட்பதுஎந்த விதத்தில் நியாயம்?" 

இந்த கேள்விகள் யாவும் இன்று வேறு இனக்குழுவை சேர்ந்த நடு நிலை சிந்தனை உடையோர் என்று எண்ணுவோர் இடத்தில் மட்டுமல்லாது,  பெரும்பாலான தமிழகத்து மக்களிடமும், சிந்தனையாளர்கள் மட்டத்திலும் உள்ளது.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிச் சொல்லியே ஈழ ஆதரவாளர்களும், போராளிகளும் ஓய்ந்து விட்டார்கள்.அதிலும் ஈழத்தில் வாழுகின்ற மக்கள் வந்தேறிகள் அல்ல, அவர்கள் அந்த தேசத்தின் பூர்வகுடிகள் என்பதை புரிய வைப்பதற்கே படாத பாடு பட வேண்டியிருக்கும் வேளையில் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி விளங்க வைப்பது கடினம் தான். ஆனால் இந்த கேள்விகளுக்கு சரியான விடை கிடைக்கும் வரை இவர்கள் யாரும் இந்த போராட்டத்தை ஆதரிக்க போவதும் இல்லை, குறைந்தபட்சம் தமிழ் நாட்டு தமிழர்கள் முழுமூச்சோடு ஆதரிக்காதவரை ஈழம் அமைவதற்கான முயற்சிகள் இலகுவானதாக இருக்காது என்பதும் உண்மை.

சரி, "ஈழம் என்று ஒரு நாடு ஏன் வேண்டும்?"

இந்த கேள்விக்கான பதிலை நமக்கு வராலாறு தருகிறது. இந்திய(தமிழ் அல்ல) காப்பியங்களும், புராணங்களும்,சென்ற நூற்றாண்டு வரையுமான இன்ன பிற இந்திய வரலாற்று நூல்களும் இலங்கையை ஒற்றை தேசமாகவே மதிப்பிடுகின்றன. இதன் பொருள்  இலங்கை என்பது பல இனக்குழுக்கள் வாழும் ஒரு நாடு. இந்தியாவை தவிர்த்த மற்ற தேசங்களின் வரலாற்று பதிவுகளும் அப்படியே உள்ளது. ஆக உலகை பொறுத்தவரையில் இலங்கை என்பது ஒரு நாடு தானே தவிர பல நாடுகள் அல்ல. இப்போது இலங்கையின் வரலாற்றை பாருங்கள், அவர்களின் வரலாற்று ஆவணங்கள் யாவும்(மகாவம்சம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரையான) இலங்கை என்பது சிங்கள தேசம் என்ற பிரகடனத்தோடே ஆரம்பம் செய்யப்படுகின்றன. தமிழர் கூட்டம் வந்தேறிகள் என்றும் அவர்கள் இந்த தேசத்தில் உரிமை அற்றவர்கள் என்றும் இன்னும் தெளிவாக இங்கு இருக்க அனுமதி அற்றவர்கள் என்றும் வரலாறு நெடுக பறைசாற்றப்படுகிறார்கள். இதன் உள்ளர்த்தம் என்ன? உலகம் தமிழர்களை சிங்களவர்களோடு இணைத்து விடுகிறது, சிங்களம் தமிழர்களை அவர்களிடம் இருந்து விரட்டுவதில் முனைப்புடன் இருந்துள்ளது. ஆக ஒரு தனி தேசத்தின் தேவை என்பது தமிழர்கள் எடுத்த முடிவல்ல, உலக வரலாறு ஆரம்ப காலம் தொட்டு தமிழர்களின் மீது திணித்த முடிவாகும். அரச முறை ஆட்சிகள் நிகழ்ந்த பொழுது இந்த தேவை அதிகார வட்டத்தில் இருந்தது. மக்களாட்சி மலர்ந்த பொழுது அந்த தேசத்தின் தேவை மக்களிடம் கையளிக்கப்பட்டது. அதை முன்னெடுத்து சென்றவர்கள் கிளர்ச்சியாளர்கள், போராளிகள் இறுதியில் பயங்கரவாதிகள் என முத்திரையிடபட்டனர்.

தொடரும் ...

No comments:

Post a Comment